Tamil movie Erumbu Review
எறும்பு – திரை விமர்சனம் !
தமிழ் சினிமாவில் யதார்த்த சினிமாக்கள் வருவது தற்போது குறைந்துள்ள சூழலில் அழகான யதார்த்த படமாக வந்துள்ளது எறும்பு. சிறிய கருவை வைத்துக்கொண்டு ஒரு முழுநீள படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் சுரேஷ். ஏழை விவசாய குடும்பத்தில் இருக்கும் அக்கா, தம்பியை சுற்றி கதை நகர்கிறது. சார்லி ஒரு ஏழை விவசாயி. அவரது முதல் மனைவி இறந்துவிடுகிறார் அவருக்கு ஒரு மகள், மகன். இரண்டாவது மனைவிக்கு ஒரு குழந்தை. கூலி வேலை செய்யும் இவர்கள் வேலைக்காக வெளியூர் சென்றுவிடுகின்றனர். காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் அக்காவும் தம்பியும் வீட்டில் இருக்கின்றனர். ஒருநாள் குழந்தையின் மோதிரத்தை தம்பி போட்டுக் கொள்கிறார். ஆனால் அந்த மோதிரம் தொலைந்து விடுகிறது. சித்தி வருவதற்குள் மாற்று மோதிரம் வாங்க இருவரும் சேர்ந்து பணம் சம்பாதிக்கும் வழியில் இறங்குகின்றனர். இறுதியில் என்ன ஆனது என்பதை கிராமத்து மணம் மாறாமல் சொல்லியுள்ளனர்.
ஏழை மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் கடன் பிரச்சினை அவர்களது வாழ்வில் எதுமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இயல்பாக காட்சிபடுத்தியுள்ளனர். அக்காவாக நடித்துள்ள மோனிகா சிவா அற்புதமாக நடித்துள்ளார். குழந்தையாக இருந்தாலும் மிகுந்த மெச்சூரிட்டியுடன் பிரச்சினைகளை கையால்கிறார். தம்பியாக நடித்துள்ள சக்தி ரித்விக் நமது அனுதாபத்தை அள்ளுகிறார். மோதிரம் வாங்க இருவரும் சேர்ந்து நிறைய வேலைகளை செய்கின்றனர். பள்ளி விடுமுறை நாட்களில் மற்ற குழந்தைகள் போல் விளையாடாமல் தங்களால் முடிந்த வேலைகளை செய்து கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்க்கும் காட்சிகள் கண்கலங்க வைத்துள்ளது. அப்பாவாக சார்லி வழக்கமான நடிப்பை கொடுத்துள்ளார். ஜார்ஜ் மரியான் மற்றும் எம்எஸ்.பாஸ்கர் தங்களது பணியை நிறைவாக செய்துள்ளனர்.
இயக்குனர் சுரேஷ் எந்தவித சமரசமும் இன்றி தான் நினைத்ததை படமாக எடுத்துள்ளார். இதுபோன்ற யதார்த்த படங்கள் நிறைய தமிழ் சினிமாவில் வர வேண்டும். அருண் ராஜின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் இதமாக உள்ளன. கிராமத்து வாழ்க்கையை பிரதிபலிக்கும் காளிதாஸின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். சாதாரண எளிய மக்களின் வாழ்வியலை உண்மைக்கு அருகில் எடுத்துள்ளார் இயக்குனர். சற்று மெதுவாக செல்லும் திரைக்கதை சற்று அயற்சியை தருவதை தவிர்க்க முடியவில்லை. மொத்தத்தில் அழகான அமைதியான ஒரு படத்தை கொடுத்த இயக்குனருக்கு வாழ்த்துகள்.