Vijay Sethupathi & Puri Jagannadh Massive Combo! Slumdog 33 Temple Road Teaser Launch Event

“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் பிரம்மாண்ட டீசர் வெளியீட்டு விழா சென்னை நகரில் உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர், ஊடகத்தினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
நிகழ்வில் இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி கௌர், நடிகர் விஜய் சேதுபதி, உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று ஊடகங்களையும் ரசிகர்களையும் சந்தித்தனர்.
டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள “ஸ்லம் டாக்” திரைப்படம் குறித்து நிகழ்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா பேசியதாவது:
ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
இது தயாரிப்பாளராக எனது முதல் திரைப்படம். இயக்குநர் பூரி ஜெகன்நாத் சார் மற்றும் சார்மி மேடம் ஆகியோருடன் இணைந்து இந்த படத்தை தயாரித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி போன்ற சிறந்த நடிகருடன் எனது முதல் திரைப்படத்தை தொடங்கியிருப்பது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.

கதாநாயகி சம்யுக்தா, தபு மேடம், துனியா விஜய் சார் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் எனது நன்றிகள். விஷ்வா, விடிவி கணேஷ், பிரம்மாஜி மற்றும் இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு ஊடகங்கள் மற்றும் பத்திரிகை நண்பர்களின் கைகளில் உள்ளது. எங்களது படைப்பை மக்களிடம் கொண்டு செல்ல நீங்கள் வழங்கும் ஆதரவுக்கு முன்கூட்டியே நன்றி தெரிவிக்கிறேன். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் என் நன்றிகள். நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் சார்மி கௌர் பேசியதாவது:
“இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ஊடக நண்பர்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதே இடம், அதே முகங்கள், அதே புன்னகைகள். 2002-ஆம் ஆண்டு ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் முதன்முதலாக சென்னை வந்த நாட்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. அப்போது ஊடக நண்பர்களை சந்தித்தேன். அதன் பிறகு பல படங்களில் நடித்தேன். உங்கள் அனைவரிடமிருந்தும் நிறைய அன்பைப் பெற்றேன். இன்றும் உங்களை சந்தித்து பேசும்போது, அந்த பாசமும், நெருக்கமும் இன்னும் மாறாமல் இருப்பதை உணர்கிறேன்.”
”‘ஸ்லம் டாக்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் சென்னை வந்துள்ளேன். ஆனால் இந்த முறை நடிகையாக அல்ல, தயாரிப்பாளராக. எங்கள் Puri Connects நிறுவனத்தின் சார்பில் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளோம். ஆனால் நேரடி தமிழ் திரைப்படமாக இது எங்களின் முதல் முயற்சி. அதனால் இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது.”
”‘ஸ்லம் டாக்’ ஒரு ஆக்சன் மற்றும் உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ளது. இதில் நீங்கள் மிகவும் இயல்பான, நிஜத்தன்மை கொண்ட ஆக்சன் காட்சிகளையும், மனிதர்களின் வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்த உணர்வுகளையும் காண்பீர்கள். பூரி ஜெகன்நாத் சாரின் திரைக்கதை சொல்லும் விதமும், விஜய் சேதுபதி சாரின் நடிப்பும் இணைந்து இந்தப் படத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளன.”
“விஜய் சேதுபதி சார் முதலில் ஒரு சிறந்த நடிகர். அதே நேரத்தில் மிகப்பெரிய நட்சத்திரமும் கூட. ஒரு திரைப்படத்திற்கு நடிப்பு திறமையும், வணிக ரீதியான மதிப்பும் ஒருசேர தேவைப்படும் போது, அந்த இரண்டையும் சமநிலைப்படுத்தும் நடிகர் அவர். இந்தப் படத்தில் இணைந்ததற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சிறந்த முறையில் இந்தப் படத்தை வெளியிடுவோம் என்று உறுதியளிக்கிறேன்.”
“தபு மேடத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தக் கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்திலிருந்தே அவரைத்தான் நினைத்திருந்தோம். கதையை கேட்டவுடனேயே அவர் சம்மதித்தார். தனது கதாபாத்திரம் மட்டுமல்லாமல், முழுக் கதையையும் பாராட்டி எங்களுக்கு நம்பிக்கையளித்தார். இன்றுவரை எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.”

“துனியா விஜய் சார் இந்தப் படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதையை கேட்டவுடனேயே உடனடியாக ஒப்புக்கொண்டார். தனது படப்பிடிப்பு தேதிகளையும் எங்களுக்காக மாற்றி அமைத்துக் கொடுத்தார். அவருடைய ஒத்துழைப்பிற்கும், அன்பிற்கும் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருப்போம்.”
“சம்யுக்தாவை முதன்முதலில் சந்தித்த தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. கதாபாத்திரத்திற்கு மிகவும் இயல்பான தோற்றமும், நடிப்புத் திறமையும் கொண்ட நடிகை தேவைப்பட்டது. சம்யுக்தா அந்த கதாபாத்திரத்தை மிக அழகாக உயிர்ப்பித்தார். அவருடைய இயல்பான நடிப்பும், எளிமையான தோற்றமும் ரசிகர்களை நிச்சயம் கவரும்.”
“விடிவி கணேஷ் சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், சமூக வலைதளங்களில் அவருடைய வீடியோக்களை பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும். இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்தோம். படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.”
“இந்தப் படத்தில் பிரம்மாஜியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.”
“எங்கள் நிறுவனத்தின் CEO விஷு ரெட்டிக்கு சிறப்பு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் இயக்குநருக்கு எந்தவிதமான அழுத்தமும் வராமல் பார்த்துக் கொண்டவர் அவர். தயாரிப்பு, மார்க்கெட்டிங், விற்பனை, விளம்பரம் என அனைத்து துறைகளையும் ஒரே நேரத்தில் கவனித்து இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்க உதவியுள்ளார். அவருடைய உழைப்பிற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது.”
“இந்தப் படத்தை ஆதரித்த ஜேபி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் முழு படக்குழுவிற்கும் என் நன்றிகள். ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ ரசிகர்களை பெரிதும் கவரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் உங்களை பெருமைப்படுத்துவோம்.” என்றார்.
இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் பேசியதாவது..,
“இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சாருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியவர் அவர்தான். அவர் ஒரு மிகப்பெரிய லெஜெண்ட். ஆரம்பத்தில் அவருடன் பணியாற்றுவது எனக்கு சற்று பயமாகவும், பதட்டமாகவும் இருந்தது. ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றியபோது அது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக மாறியது. இந்த வாய்ப்பிற்காக அவருக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் சார்மி மேடத்திற்கும் நன்றி. அவர் அனைவரையும் மிகவும் அன்பாகவும், எளிமையாகவும் கவனித்துக் கொண்டார். விஜய் சேதுபதி சாருக்கும், சுமிதா மேடத்திற்கும் என் நன்றிகள்.

இந்த படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும் வித்தியாசமான அனுபவத்தை தரக்கூடிய வகையில் உருவாகியுள்ளது. ரசிகர்களுக்கு இது ஒரு இனிய ஆச்சரியமாக இருக்கும். பாடல்கள் மட்டுமின்றி, பின்னணி இசையிலும் நிறைய புதுமைகளை கொண்டு வர முயற்சித்துள்ளோம். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.”.
நடிகர் விடிவி கணேஷ் பேசியதாவது:
“இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு திடீரென வந்தது. ஒரு நாள் பூரி ஜெகன்நாத் சார் அழைத்தார். உடனே எனக்கு நினைவுக்கு வந்தது ‘போக்கிரி’. இன்றைய தமிழக முதலமைச்சர் நடித்த அந்த பிரம்மாண்ட வெற்றிப் படத்தின் ஒரிஜினலை இயக்கியவர் அவர்தான். அதோடு பல மாஸ் ஹிட் படங்களை கொடுத்த மிகப்பெரிய இயக்குநர். என் மேனேஜரும் அவரைப் பற்றி நிறைய சொல்லியிருந்தார். அதனால் அவரை சந்திக்கும்போது ஒரு விதமான எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் நேரில் சந்தித்தபோது, அவ்வளவு பெரிய வெற்றிகளைப் பெற்ற இயக்குநர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல், மிகவும் எளிமையான, மென்மையான மனிதராக அவரை பார்த்தேன். அவருடன் அமர்ந்து பேசியதும், ஒன்றாக உணவருந்தியதும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்த கதாபாத்திரம் பற்றிய விவரங்களை இப்போது சொல்ல முடியாது. ஆனால் அதை நடித்தபோதே மிகவும் ரசித்தேன். பூரி சார் நடிகர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை வாங்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
“தபு மேடம் ரசிகன் நான் அவருடைய அன்பையும் அவர் குழுவினரின் அன்பை நான் மறக்க முடியாது. குறிப்பாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தபோது, தினமும் எங்களுக்கு அவர் அனுப்பிய உணவுகள் மிகவும் பிரமாண்டமாக இருக்கும். மட்டன், சிக்கன், புலாவ் என பல வகையான உணவுகளை நிறைய அளவில் அனுப்புவார் அவர் கூட நடித்த அனுபவம் மறக்க முடியாதது. அந்த அன்பும், உபசரிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. படப்பிடிப்பு அனுபவத்தை இன்னும் இனிமையாக்கிய விஷயங்களில் இதுவும் ஒன்று.”
“படப்பிடிப்பின் முதல் நாளிலேயே விஜய் சேதுபதி சாரின் அர்ப்பணிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டேன். தெலுங்கு டயலாக்குகளை எழுதி வைத்து மனப்பாடம் செய்வார். கேரவனில் உட்கார்ந்து ஓய்வெடுப்பதை விட, வெளியிலேயே அமர்ந்து தொடர்ந்து தனது வேலையில் முழு கவனத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த அர்ப்பணிப்பைப் பார்த்தபோது, நான் முன்பு பணியாற்றிய இன்றைய தமிழக முதலமைச்சரின் உழைப்பும், அர்ப்பணிப்பும் நினைவுக்கு வந்தது. அதே அளவிலான ஈடுபாட்டையும், உழைப்பையும் விஜய் சேதுபதி சாரிடமும் பார்த்தேன்.
அதனால்தான் இன்று அவர் இந்திய அளவில் ஒரு வெற்றிகரமான நடிகராக திகழ்கிறார். இந்த உயரத்தை அடைவதற்கு திறமை மட்டுமல்ல, கடின உழைப்பும், பொறுமையும் அவசியம். சரியான நேரம் வரும்வரை காத்திருந்து தொடர்ந்து உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.
இந்தப் படம் வெளியான பிறகு, குறிப்பாக தெலுங்கு ரசிகர்களும் அவருடைய நடிப்பை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். தமிழ், தெலுங்கு என எந்த மொழியாக இருந்தாலும் அவர் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். அவருடைய திறமையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பூரி சார் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
நடிகர்கள் அனைவரிடமிருந்தும் சிறந்த நடிப்பை வாங்கிக் கொள்ளும் திறமை பூரி சாருக்கு இருக்கிறது. அதே நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் ஒழுக்கமாகவும், நேர்த்தியாகவும் செயல்படுவார். கலைஞர்களை சரியான நேரத்தில் அழைத்து, திட்டமிட்டபடி பணிகளை முடித்து விடுவார். அந்த தொழில்முறை அணுகுமுறையே அவரை இந்த உயரத்தில் நிலைநிறுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் நான் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், மிகவும் மகிழ்ச்சியுடன் நடித்தேன். படக்குழுவில் இருந்த உதவி இயக்குநர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். இந்தப் படத்திற்காக மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. டீசரிலேயே அதன் தரம் தெரிகிறது.
‘ஸ்லம் டாக்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இந்தப் படத்திற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுகள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நடிகை சம்யுக்தா பேசியதாவது..,
“பூரி ஜெகன்நாத் சாருடன் பணியாற்றியது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. ஒரு காட்சியை மிகவும் எளிமையாகவும், அதே நேரத்தில் ஸ்டைலாகவும் இயக்கக்கூடியவர் அவர். இயக்கம் என்பது ஒரு கலை. அதை அவர் மிகவும் இயல்பாக கையாள்கிறார். சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்து, கலைஞர்களிடம் இருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொணரும் திறமை அவருக்கு இருக்கிறது…







