The Dark Heaven Review: An Unpredictable Crime Thriller With a Twisting Climax T

தி டார்க் ஹெவன்’ விமர்சனம் – யாரும் எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ்; த்ரில்லர் ரசிகர்களை கவர்கிறதா?

சஸ்பென்ஸ் மற்றும் க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ (The Dark Heaven) திரைப்படம், மர்மமான கொலைகள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் பரபரப்பான விசாரணை மூலம் ரசிகர்களை கவர முயற்சிக்கிறது. படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்பதை பார்க்கலாம்.

தி டார்க் ஹெவன் கதை

அமைதியான மாநகரத்தில் அடுத்தடுத்து நிகழும் மர்மமான கொலைகளுடன் கதை தொடங்குகிறது. இந்த வழக்கை விசாரிக்க நேர்மையான போலீஸ் அதிகாரியான பாரி நியமிக்கப்படுகிறார்.

முதலில் வழக்கமான கொலை வழக்காகத் தொடங்கும் விசாரணை, அடுத்தடுத்த கட்டங்களில் பல மர்மங்களையும் எதிர்பாராத திருப்பங்களையும் சந்திக்கிறது. கொலைகளுக்குப் பின்னால் இருப்பது யார்? இந்தக் குற்றங்களுக்கும் போலீஸ் அதிகாரியின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு? இறுதியில் அவர் இந்த மர்மங்களை எப்படி அவிழ்க்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படம் எப்படி இருக்கு?

படத்தின் முதல் பாதியை இயக்குநர் பாலாஜி நேர்த்தியாகவும், கதையோடு ஒட்டியும் நகர்த்தியுள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது.

குறிப்பாக இரண்டாம் பாதியில் இடம்பெறும் சில திருப்பங்களும், வேகமான திரைக்கதையும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. தேவையற்ற காதல் காட்சிகள் அல்லது திணிக்கப்பட்ட கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல், முழுக்க முழுக்க க்ரைம் மற்றும் விசாரணையை மையமாக வைத்து படம் பயணிப்பது சிறப்பு.

நடிகர்களின் பங்களிப்பு எப்படி?

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சித்து, மிடுக்கான போலீஸ் அதிகாரியான பாரி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். கதாபாத்திரத்தின் தீவிரத்தை உணர்ந்து அவரது உடல்மொழியும், வசன உச்சரிப்பும் கச்சிதமாக அமைந்துள்ளன.

பிக் பாஸ் தர்ஷிகா, உமையாள் கதாபாத்திரத்திலும், பிக் பாஸ் ரித்விகா, கனி கதாபாத்திரத்திலும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர்.

மேலும் பிரதீப் (கான்ஸ்டபிள் அழகு), வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்துள்ளனர்.

பிளஸ்

சக்தி பாலாஜியின் பின்னணி இசை படத்தின் த்ரில்லர் உணர்வை அதிகரிக்கிறது. மர்மமான சூழ்நிலைகளை உருவாக்குவதிலும், முக்கியமான காட்சிகளின் தாக்கத்தை அதிகரிப்பதிலும் பின்னணி இசை முக்கிய பங்கு வகிக்கிறது.

மணிகண்டன் பி.கே.வின் ஒளிப்பதிவு குறிப்பாக இரவு நேரக் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறது. படத்தின் இருண்ட உலகத்தை பிரதிபலிக்கும் வண்ண அமைப்பும், காட்சிகளின் ஒளிப்பதிவும் படத்தின் கதைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன.

அனைத்தையும் தாண்டி படத்தின் மிகப்பெரிய பலம் அதன் க்ளைமாக்ஸ். படம் முடியும் வரை குற்றவாளி யார் என்பதை பார்வையாளர்கள் தங்களுக்குள் கணிக்க வைக்கும் வகையில் திரைக்கதை செல்கிறது. ஆனால் இறுதியில் எதிர்பாராத திருப்பத்தை வைத்து இயக்குநர் பாலாஜி கவனம் ஈர்க்கிறார்.

மைனஸ்

படத்தின் சில பகுதிகள் மிகவும் மெதுவாக நகர்கின்றன. குறிப்பாக சில காட்சிகளில் திரைக்கதை வேகம் குறைந்து, படம் சற்று டல்லடிப்பது சுவாரஸ்யத்திற்கு தடையாக உள்ளது.

அதேபோல் ஆங்காங்கே சில லாஜிக் மீறல்கள் தென்படுகின்றன. அவற்றைத் தாண்டி பார்த்தால், க்ரைம் மற்றும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு ‘தி டார்க் ஹெவன்’ ஒரு சுவாரஸ்யமான தியேட்டர் அனுபவத்தை கொடுக்கக்கூடிய படமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில்: மர்மமான கொலைகள், பரபரப்பான விசாரணை, எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ் ஆகியவற்றுடன் பயணிக்கும் ‘தி டார்க் ஹெவன்’, த்ரில்லர் ரசிகர்களுக்கு கவனம் செலுத்தக்கூடிய திரைப்படம்.