‘Pani’ movie review: Joju George’s gory drama | Joju George | Abinaya
பணி திரைப்பட விமர்சனம்
மலையாளத்தில் ஜோஜூ ஜார்ஜ் இயக்கி நடித்துள்ள படம் பணி. கடந்த வாரம் அங்கு வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது தமிழ் பேசி வெளியாகியுள்ளது. க்ரைம் த்ரில்லர் படமான இதன் கதையைப் பற்றி பார்க்கலாம்.
கேரள மாநிலம் திருச்சூரில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தோடு வலம் வருகிறார் நாயகன் ஜோஜு ஜார்ஜ். போலீஸ் கூட அவர்களை எதுவும் செய்யமுடியாது. இந்த நிலையில் குற்ற செயல்களில் ஈடுபடும் இரண்டு இளைஞர்கள் அவரது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார்கள். அவர்கள் மூலம் நினைத்து கூட பார்க்க முடியாத இழப்பு ஜோஜு ஜார்ஜுக்கு ஏற்படுகிறது. அதனால் அவர்களை பழி தீர்க்க, அவரது மொத்த சாம்ராஜ்யமே களத்தில் இறங்க, அந்த இளைஞர்கள் எதிர்பார்க்காத வகையில் பதிலடி கொடுக்கிறார்கள். அவர்களின் பதிலடியை முறியடித்து தனது பாணியில் அவர்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத தண்டனை கொடுக்க களம் இறங்கும் ஜோஜு ஜார்ஜ், அதை எப்படி செய்து முடிக்கிறார் என்பதே ‘பணி’.
மலையாள சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின்னர் நாயகனாக நடித்து தற்போது உச்ச நடிகராக இருக்கும் ஜோஜூ ஜார்ஜ் முதல்முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்துள்ளது. தனது வழக்கமான வேட்டி சட்டையில் கலக்கலாக நடித்துள்ளார். அவரது அசால்ட்டான பார்வையும் உடல் மொழியும் கச்சிதம்.
மனைவிக்கு ஏற்பட்ட நிலை கண்டு கலங்குவதும், அடுத்த கனமே அதற்கு காரணமானவர்கள் மீது இருக்கும் தனது கோபத்தை கண்களில் வெளிப்படுத்துவது என அதிகம் பேசாமலேயே தனது உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அபிராமி அழகாக இருக்கிறார். தனக்கு நேர்ந்த அநீதி கண்டு கலங்குவதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
வில்லன்களாக நடித்திருக்கும் இளைஞர்கள் சாகர் சூர்யா மற்றும் ஜுனாயஸ்.வி.பி இருவரும் மிரட்டுகிறார்கள். அத்தனை பெரிய சாம்ராஜ்யம் கொண்ட நாயக கூட்டத்தை அசால்ட்டாக டீல் செய்து மிரட்டியுள்ளனர். ஓடி ஒளிய வழியில்லாத நிலையில் திருப்பி அடிக்க துணியும் இடத்தில் தியேட்டர் அதிர்கிறது.
சீமா, பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், பாபி குரியன், ரஞ்சித் வேலாயுதம், சாந்தினி ஸ்ரீதரன், அபாயா ஹிரண்மயி, சோனா மரியா ஆபிரகாம், லங்கா லக்ஷ்மி, பிரிட்டோ டேவிஸ், ஜெயசங்கர், அஷ்ரப் மல்லிசேரி, டாக்டர் மெர்லட் ஆன் தாமஸ் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
எதிர்பாராத கிளைமாக்ஸ் படத்திற்கு மிகச் சரியாக உள்ளது. வன்முறை அதிகம் என்றாலும் விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை படத்துக்கு பலமாக உள்ளது. இரண்டாம் பாதி தொடக்கத்தில் சற்று தொய்வு இருந்தாலும் இந்த பணி நிச்சயம் த்ரில்லர் பட ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மொத்தத்தில் பணி – வெற்றி. ரேட்டிங் 3.5/5