National Award-winning actress Keerthy Suresh in the lead, Raghu Thatha marks the directorial debut of Suman Kumar.

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் இசை வெளியீடு

இந்திய திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது.‌

:தி ஃபேமிலி மேன்’, ‘ ஃபார்ஸி’ ஆகிய வெற்றி பெற்ற இணைய தொடர்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். காமெடி டிராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது நடிகை கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இயக்குநர் சுமன் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குநர் சுமன் குமார் பேசுகையில், ” ரகு தாத்தா என்ற படத்தை இயக்குவேன் என்று எதிர்பார்க்கவில்லை.‌ என்னுடைய நண்பர்கள் கிங்ஸ்லி மற்றும் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் நடைபெற்ற விவாதத்தின் போது..‌ ‘உறவினர் ஒருவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவாறே அவருடைய பதவி உயர்வுக்காக இந்தி தேர்வு ஒன்றினை எழுதினார்’ என்ற தகவலை பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சு என்னை கவர்ந்தது. மேலும் இப்படத்திற்கான கருவாகவும் உருவானது. ஆனால் இது திரைப்படமாக உருவானதற்கு என்னுடைய எழுத்துப் பணியில் உதவியாளர்களாக இருக்கும் ஆனந்த், மனோஜ்… ஆகியோர்களின் கடின உழைப்புதான் காரணம் இவர்களுடன் ஒளிப்பதிவாளர் -கலை இயக்குநர்- இசையமைப்பாளர் – ஆடை வடிவமைப்பாளர் -ஒலி வடிவமைப்பாளர்- ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால்தான் சாத்தியமானது.‌

இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அற்புதமான கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் கற்பனைத் திறன் மிகு இயக்குநரான விஜய் சுப்பிரமணியம்- தயாரிப்பாளரிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.‌ அப்போது தயாரிப்பாளரிடம், ‘ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அந்தப் பெண் ஆணின் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால்.. அவனுக்கு இந்தி தெரிய வேண்டும் என நிபந்தனை விதிக்கிறாள்’ என மிக சுருக்கமாக ஒரு கதையை சொன்னேன். அது அவருக்கு பிடித்திருந்தது. ஆனால் அந்த கதையை இயக்கவில்லை.‌ ஆனால் வேறொரு கதையை எழுதி, இயக்கியிருக்கிறேன்.‌

இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் ஐந்து பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவரும் நானும் ஒரு வகையில் ‘லூசு’. இந்த இரண்டு லூசும் சேர்ந்து பணியாற்றினால் என்ன மாதிரியான படைப்பு வரும் என்று கேள்வி எழும். அதற்கு விடை அளிக்கும் வகையில் இந்த படத்தின் பாடல்கள் இருக்கும். அனைத்து பாடல்களும் நன்றாகவே இருக்கிறது.

இந்த திரைப்படம் இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை தான் நகைச்சுவையாக பேசுகிறது.” என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், ” இயக்குநர் சுமன் குமார் கொரோனா தொற்று காலகட்டத்தில் அவருடைய ‘தி ஃபேமிலி மேன்’ இணைய தொடருக்கு என்னுடைய இசையில் வெளியான பாடல்களை பயன்படுத்துவது தொடர்பாக பேசத் தொடங்கினார். அந்த சந்திப்பு கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் வரை சென்றது. அவர் சொன்னது சரிதான். இரண்டு லூசுகள் சந்தித்தால் எப்படி இருக்கும்..? இயக்குநர் சுமன் பயங்கரமான லூசு. அவருடைய பேச்சு ஜாலியாக இருந்தது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை முதன் முதலில் பின்னணி இசை இல்லாமல் பார்க்கும் போது.. ஒரு கே. பாக்யராஜ் படத்தை பார்த்தது போல் இருந்தது. ஒரு தீவிரமான அரசியலை அவர் நகைச்சுவையாகவும், மென்மையாகவும் காட்சிப்படுத்தி இருப்பார்.

அதே தருணத்தில் தமிழ் சினிமாவில் எனக்குப் பிடித்த ஜானர் என்றால்… அது டிராமா தான்.‌ மணிரத்னம் சார்- கேபி சார்- என பெரிய இயக்குநர்கள் அனைவரும் கதையை மையமாக வைத்து, தங்களது எண்ணத்தை திரைக்கதையாக்கி இருப்பார்கள். அந்த வகையில் இந்த படத்தின் ஐடியா எனக்கு மிகவும் பிடித்திருந்தது. திணிப்புகளில் பலவகையான திணிப்பு இருக்கிறது.‌ குறிப்பாக பெண்களுக்கு ஏராளமான திணிப்புகள் இருக்கிறது.

யார் மீதும் எதனையும் திணிக்க கூடாது என்பது தான் என்னுடைய தனிப்பட்ட கருத்து.‌ அடிப்படையாக நான் நேசிக்கும் விசயம் இப்படத்தில் இருப்பதால் இசையமைக்க கொண்டேன்.

உண்மையை சொல்லப்போனால்… இயக்குநர் சுமனுடன் பாடல்களை உருவாக்குவது எனக்கு எளிதாக இருந்தது. அவருக்கு இசை மீது நிறைய காதல் இருக்கிறது. அவர் கிட்டார் எனும் இசைக்கருவியை வாசிக்கும் கலைஞரும் கூட. அவருக்கு இசை பற்றிய தெளிவான புரிதல் இருந்ததாலும் … படத்தின் கதை பீரியட் கால கட்டத்தை சேர்ந்தது என்பதாலும்.. புது வகையான ஒலிகளை பயன்படுத்தும் சுதந்திரத்தை கொடுத்தார்.

ஒரு கருத்தை சொன்னால் அது சீரியஸ் என்று அர்த்தம் அல்ல.‌ ஒரு கருத்தை மென்மையாகவும், நகைச்சுவையாகவும் சொல்ல முடியும்.‌ ஒரு கருத்தை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் செல்வது என்பது அழகானது. அதே தருணத்தில் கிண்டலும், நையாண்டியும் நம் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப் படத்தில் இவை அனைத்தும் இருக்கிறது.

இந்தப் படத்தில் ராக் மியூசிக் இருக்கிறது. கானா மியூசிக் இருக்கிறது.‌ இந்த கால ரசிகர்களுக்கு பிரீயட்டிக்கான படத்தை தருவதால்.. அந்த காலகட்டத்தில் பயன்படுத்தாத புதிய புதிய இசைக்கருவிகளை பயன்படுத்தலாம். அதற்கான சுதந்திரம் எனக்கு இந்த படத்தில் கிடைத்தது. இதற்காக நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் கதை அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இந்தத் திரைப்படத்தில் பேசப்பட்டிருக்கும் நுட்பமான அரசியல் படம் வெளியான பிறகு அது தொடர்பான விவாதத்தை எழுப்பும் என்பது என்னுடைய நம்பிக்கை.

இந்த திரைப்படம் பத்து.. பதினைந்து.. ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், நல்லதொரு படைப்பை வழங்கி இருக்கிறோம் என்ற திருப்தியை ஏற்படுத்தும்.

ஐந்து பாடல்கள் இருக்கிறது. நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன்.‌ இயக்குநர் சுமன் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். வசனகர்த்தா மனோஜ் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.‌ நான் ஒரு பாடலை பாடியிருக்கிறேன்.‌ வித்தியாசமான குரலை பயன்படுத்தி இருக்கிறேன்.

இந்த திரைப்படத்தில் கிட்டார் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இடம்பெற்றிருக்கிறது. இதற்காக என்னுடைய நண்பர் விக்ரம்- கிட்டார் வாசித்திருக்கிறார்.

ஊடகத்திற்கு எப்போதுமே ஒரு சக்தி உண்டு. நல்ல படைப்புகளை அடையாளம் கண்டு அதனை பாராட்டி வெற்றி பெறச் செய்வது. ரகு தாத்தா படத்திலும் அனைத்து அம்சங்களும் இருக்கிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் பேசுகையில், ” சந்தோஷமான தருணம் இது. ரகு தாத்தா ஆடியோ லாஞ்ச் இல்ல .. ரகு தாத்தா இசை வெளியீட்டு விழா.‌

இயக்குநர் சுமன் – அறிமுகமான நண்பர் விஜய்யுடன் வருகை தந்து, சந்தித்து கதையை சொன்னார். அவர் கதையை சொல்லிவிட்டு சிரித்து விடுவார்.‌ அதன் பிறகு என்னை பார்ப்பார். அதற்குப் பிறகுதான் நாங்கள் சிரிப்போம். அவர் என்னை பார்க்கும் போது..’காமெடி சொன்னால் சிரிக்கவே மாட்டேன் என்கிறார்களே..’ என தயக்கத்துடனே எங்களைப் பார்ப்பார். அதன் பிறகு தான் நாங்கள் சிரிப்போம்.‌ அதன் பிறகு தான் அவரிடம் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நடிக்கிறேன் என சம்மதம் சொன்னேன். அவரிடம் உங்களுடைய அணுகுமுறை நன்றாக இருக்கிறது. இதற்கு முன்னால் இப்படி ஒரு திரைக்கதையை நான் கேட்டதில்லை. அதனால் ‘ரகு தாத்தா’வில் நடிக்கிறேன் என்று சொன்னேன்.

அதே சமயம் எனக்குள் இந்த திரைப்படத்தை எப்படி ரசிகர்களை திரையரங்கத்திற்குள் இழுத்து வர முடியும்? என்ற தயக்கம் இருந்தது. அதனை இயக்குநரும், விஜயும் நம்பிக்கை அளித்து தயக்கத்தை உடைத்தனர். அவர்கள் கொடுத்த துணிச்சலுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சுமன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நான் நடித்திருக்கிறேன் எனும்போது இன்னும் பெருமிதம் கூடுகிறது.‌ இதற்காக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் மற்றும் கார்த்திக் கௌடா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் நீண்ட நாள்களாக எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கும் ஆல்பம் ‘ரகு தாத்தா’. அனைவரும் இப்படத்தின் பாடல்களை கேட்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஷான் குறிப்பிட்டது போல் இந்த படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு ஜானரில் இருக்கும். இது போன்றதொரு ஆல்பத்தை வழங்கியதற்காக இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அருகே வா..’ என்ற பாடல் என்னுடைய ஃபேவரைட்.

ஒளிப்பதிவாளர் யாமினியுடன் ஏற்கனவே ‘சாணி காயிதம்’ எனும் படத்தில் பணியாற்றி இருக்கிறேன். அது வேறு ஜானர். இந்தப் படத்தில் வண்ணமயமாக அழகாக காட்சி படுத்தியிருக்கிறார். அவருடைய பணி நேர்த்தியாக இருந்தது.‌ அதிலும் பெண் ஒளிப்பதிவாளருடன் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது.

இந்த திரைப்படத்தில் தாத்தா கேரக்டரில் நடித்த எம். எஸ். பாஸ்கர்- படபிடிப்பு தளத்தில் என்னை ‘பொம்மை பொம்மை..’ என்று தான் அழைப்பார்.‌ படத்தில் வசனம் பேசும்போது அவருடைய டைமிங் சென்ஸ் அபாரமாக இருக்கும். படத்தில் தாத்தா- பேத்தி இடையான கெமிஸ்ட்ரியும் இருக்கிறது. அதுவும் ரசிகர்களுக்கு பிடிக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியதும் மறக்க முடியாதது. மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரகு தாத்தா – ஒரு முழுமையான காமெடி டிராமா. இந்தப் படம் இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை பற்றி தான் பேசுகிறது.‌ எந்த மாதிரியான திணிப்பு என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் படத்தில் சிறிய அளவில் கருத்து சொல்ல முயற்சித்திருக்கிறோம். ஆனால் அது பிரச்சாரமாக இருக்காது. இது படத்தை பார்க்கும் போது ரசிகர்களுக்கு புரியும்.

பொதுவாகவே திணிப்பை பற்றி பேசியிருக்கிறோம். அதில் கதையை தொடர்பு படுத்தும் வகையில் இந்தியை ஒரு உதாரணமாக சொல்லி இருக்கிறோம்.

இந்த படம் எந்த ஒரு அரசியலையோ எதிர்மறையான விசயங்களையோ சொல்லவில்லை. இது ஒரு நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படம். படத்தை பார்க்க திரையரங்கத்திற்கு வருகை தருபவர்கள் படத்தை பார்த்து ஜாலியாக சிரித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பலாம். ” என்றார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments