Tamil Movie Por Thozhil review | Ashok Selvan | Sarath kumar
சரத்குமார், அசோக் செல்வன் இணைந்த “போர் தொழில்” – திரை விமர்சனம்!
தமிழ் சினிமாவில் க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு என்று தனி மவுசு இருக்கிறது. அதுமட்டுமின்றி தற்போது ஓடிடியின் வரவால் அனைத்து மொழிகளிலும் வெளியான த்ரில்லர் படங்களை பார்க்கும் ரசிகர்கள் தமிழிலும் அதுபோன்ற நல்ல க்ரைம் த்ரில்லர் படங்கள் வராதா என்று ஏங்கிக் கொண்டு இருக்கின்றனர். அவர்களின் ஏக்கங்களுக்கு தீனி போடும் வகையில் இந்த வாரம் வெளியாகியுள்ளது விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள போர் தொழில் திரைப்படம்.
படத்தின் கதை என்னவென்றால் திருச்சியில் தொடர்ந்து இளம்பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். உள்ளூர் போலீசால் கண்டுபிடிக்க முடியாமல் வழக்கை விசாரிக்க சென்னையில் இருந்து சிறப்பு குற்றப்பிரிவு போலீஸான சரத்குமார் வருகிறார். கூடவே புதிதாக பணியில் சேர்ந்த டிஎஸ்பி அசோக் செல்வனும் வருகிறார். இறுதியில் யார் கொலையாளி? கொலைக்கான காரணம் என்ன? என்பதை கண்டுபிடித்தார்களா என்பது தான் கதை.
வழக்கமான க்ரைம் த்ரில்லர் கதைபோல் இல்லாமல் காட்சிக்கு காட்சி ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர். அசோக் செல்வன் படத்துக்கு படம் தன்னை நிரூபித்து வருகிறார். அதுவும் க்ரைம் த்ரில்லர் படமென்றால் இவருக்கு சொல்லவா வேண்டும். மீசை தாடி இல்லாத போலீசாக கவர்கிறார். பயம், தயக்கம், தடுமாற்றம் என இளம் காவல்துறை அதிகாரியாக சிறப்பாக நடித்துள்ளார். உயர் அதிகாரி சரத்குமாருக்கு தனது புத்தக அறிவு மூலம் தானும் படித்தவன் என காட்டுமிடத்தில் ஸ்கோர் செய்கிறார். உயர் அதிகாரியாக சரத்குமார் தனது அனுபவ நடிப்பை அப்படியே அள்ளித்தெளித்துள்ளார். படம் முழுக்க இறுக்கமான முகத்துடன் வலம்வரும் அவர் தனது அனுபவம் என்ன என்பதை காட்டியுள்ளார். உதவியாளராக வரும் நிகிலா விமலுக்கு வழக்கமான வேடம் தான். சுவாரஸ்யமாக தொடங்கி தொடர் கொலைகள் யார் செய்திருப்பார்கள் என செல்லும் திரைக்கதை நன்றாக எழுதப்பட்டுள்ளது.
இடைவேளையிலேயே படம் முடிந்துவிட்டது போல் தோன்றினாலும் இதனை தொடர்ந்து இரண்டாம் பாதியில் என்ன சொல்லப் போகிறார்கள் என்ற ஆவல் தோன்றுவதே இப்படத்தின் வெற்றி. மறைந்த சரத்பாபு இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். குற்றவாளிக்கான பின்கதை சற்று ஏமாற்றமாக இருந்தது. ஆல்பிரட் பிரகாஷ் மற்றும் விக்னேஷ் ராஜாவின் வசனங்கள் நச். ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை மிரட்டல். காட்சிகளின் உணர்வுகளை கடத்துவதில் பின்னணி இசை முக்கிய பங்காற்றுகிறது.
இப்படி ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தை கொடுத்ததற்காகவே இயக்குனரை பாராட்டலாம். இந்த வாரம் நம்பி திரையரங்கு செல்ல தகுந்த படம் போர் தொழில்.