சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தின் கேடிஎம் உலகெங்கும் வெற்றிகரமாக விநியோகம்
இந்தியப் படங்களின் வெளிநாட்டு விநியோகத்தில் முன்னணியில் உள்ள ஐபிக்ஸ் எண்டர்டெயின்மென்ட் எல்எல்சி யுஎஸ்ஏ, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் வெளியீட்டு உரிமையை இந்தியாவைத் தவிர உலகம் முழுவதற்கும் பெற்றுள்ளது.
அனைத்து ஏரியாக்களும் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், மே 13-ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது. குறித்த நேரத்தில் திரைப்படம் உலகெங்கும் வெளியாவதை உறுதி செய்யும் நோக்கில், பல்வேறு நாடுகளில் உள்ள திரையரங்குகளுக்கு கேடிஎம் குறியீட்டை ஐபிக்ஸ் எண்டர்டெயின்மென்ட் ஏற்கனவே அனுப்பி விட்டது.
அங்கெல்லாம் படம் சென்சார் உள்ளிட்ட நடைமுறைகளை நிறைவு செய்து வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. மே 12 அன்று இரவு சில பகுதிகளில் சிறப்பு காட்சிகள் இருக்கும் என்றும் ஐபிக்ஸ் எண்டர்டெயின்மென்ட் அறிவித்துள்ளது.
பிரைம் மீடியா (அமெரிக்கா), யார்க் சினிமா (கனடா), பொலேய்ன் சினிமாஸ் (யுகே மற்றும் ஐரோப்பா), யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் (வளைகுடா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை), எம்கேஎஸ் டாக்கீஸ் (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து) மற்றும் டிஎம்ஒய் (மலேசியா) ஆகியவற்றுடன் டான் வெளியீட்டுக்காக ஐபிக்ஸ் இணைந்துள்ளது.
இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான டானின் சர்வதேச விநியோக உரிமையை தங்களுக்கு வழங்கியதற்காக லைகா புரொடக்ஷன்ஸின் திரு சுபாஸ்கரன், திரு ஜிகேஎம் தமிழ் குமரன் ஆகியோருக்கு ஐபிக்ஸ் எண்டர்டெயின்மென்ட் நன்றி தெரிவித்துள்ளது.
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முறையே கே எம் பாஸ்கரன் மற்றும் நாகூரன் கையாண்டுள்ளனர்.