‘சாணி காயிதம்’ இசையமைப்பாளர் சாம் CS-க்கு குவியும் பாராட்டுகள்

பின்னணி இசைக்காக பாராட்டுகளை அள்ளி குவிக்கும் இசை அமைப்பாளர் சாம் சி எஸ்

பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் சாம் சி எஸ் க்கு குவியும் பாராட்டுகள்..

அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சாணி காயிதம்’ படத்தை பார்வையிட்ட ரசிகர்கள், படத்தின் பின்னணி இசையை குறித்து தங்களது மனம் திறந்த பாராட்டுகளை கைவலிக்க தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக ஹிட்டடிக்கும் இவரது பாடல்களுக்கு ஏற்கனவே பாராட்டுகளைத் தெரிவித்து வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் உயர்ந்து வருகிறது என்பது தனிக்கதை.

இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில் வெளியான திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் மில்லியன் கணக்கிலான இசை ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு எப்படி வித்திடுகிறதோ.. அதே போல், அவரது இசையில் உருவாகும் திரைப்படங்களில் பின்னணி இசையும் அதிகளவில் பேசப்படும். நடிகர்கள் மாதவன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தில் தன்னுடைய வித்தியாசமான பின்னணி இசையை வழங்கி, உலகளவில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த இவர், தொடர்ந்து தன்னுடைய கடின உழைப்பை வழங்கி, இயக்குநர்களின் கற்பனை கலந்த படைப்புகளை தன்னுடைய இனிமையான இசையாலும், தனித்துவமான மெல்லிசை மெட்டுகளாலும், பிரத்யேகமான துள்ளலிசைப் பாடல்களாலும், துடிப்புள்ள பின்னணி இசையாலும் உயிர்ப்பித்து வருகிறார்.

‘சாணி காயிதம்’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இடையேயான உறவு குறித்து விவரிக்கையில் இடம்பெற்ற, ‘மலர்ந்தும் மலராத..’ என்ற பாடலின் நவீன வடிவம், இன்றைய இளம் தலைமுறை இசை ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இந்தப்படத்தில் ஒளிப்பதிவாளரும், இயக்குநரும் இணைந்து வடிவமைத்த நீளமான காட்சிகள் பலவற்றுக்கு, பார்வையாளர்களை சோர்வடையச் செய்யாமல் கதை மீது கவனத்தை செலுத்த இவரது பின்னணி இசை முதன்மையான காரணியாக இருந்தது என படத்தின் பின்னணி இசை குறித்து இணையத்தில் வெளியான பின்னூட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவரது இசையில் உருவான பல பாடல்கள் இன்றும் இளந்தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

‘விக்ரம் வேதா’விற்கு பிறகு வெளியான ‘அடங்க மறு’, ‘அயோக்யா’, ‘கைதி’ என பல படங்களில் தன் திறமையை வெளிப்படுத்தி, வெற்றிகரமான இசையமைப்பாளர் என்ற அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றிருக்கும் சாம் சி எஸ் அவர்களிடம், நீங்கள் பணியாற்றும் படங்களில் பின்னணி இசை பார்வையாளர்களால் அதிக அளவு ரசிக்கப்பட்டு பாராட்டப்படுகிறதே.. ஏன்? என கேட்டபோது, ” இயக்குநர்கள் கதையை முதன் முறையாக விவரிக்கும் போதே பின்னணி இசை குறித்த குறிப்புகள் என் மனதில் தோன்றிவிடும். கதாபாத்திரங்கள், கள சூழல்கள், வசனங்கள், கதை நகரும் போக்கு, இசை முழுவதுமாக மௌனிக்கப்பட வேண்டிய நிமிடங்கள், பின்னணி இசைக்கு முக்கியத்துவம் உள்ள தருணங்கள்… ஆகியவற்றை துல்லியமாக அவதானித்த பிறகு, என்னுடைய இசைக் கோர்வையை தொடங்குகிறேன். இயக்குநர்களின் வேண்டுகோள் அல்லது படக்குழுவினரின் இசை சார்ந்த கோரிக்கை ஏதேனும் இருந்தால் அவற்றையும் செவிமடுத்து பின்னணி இசையை தொடர்கிறேன். வித்தியாசமான ஒலி குறிப்புகள் மூலம் கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கவும் முயற்சிக்கிறேன். கதை, திரைக்கதை, அதனுடைய பின்னணி இசையை எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. எந்த பாணியிலான சினிமா என்பதையும் அவதானித்து பின்னணி இசையை வழங்குகிறேன். ரசிகர்களின் ரசனையையும், அவர்களின் எதிர்பார்ப்பையும் கடந்து ஒரு ஒலியை வழங்கும் போது, அவர்களின் மகிழ்ச்சியை கரவொலியாக உணர்கிறேன்.

பின்னணியிசைக்காக எடுக்கும் முயற்சிகளைப் போல், படத்தில் இடம்பெறும் பாடல்களுக்காகவும் பிரத்யேக தேடல் இருக்கும். பாடல்களை கதைகளமும், கதாப்பாத்திரமும், அதன் திரைக்கதையும் தான் தீர்மானிக்கிறது. மாண்டேஜஸ் பாடல்கள் என்றாலும், அதிலும் ஒரு இசை சார்ந்த அனுபவம் பார்வையாளர்களுக்கு கிடைக்கவேண்டும் என்ற பெருவிருப்பத்துடன் பணியாற்றுகிறேன். இசை ரசிகர்களின் காதுகளில் ஒலி சப்தமாக சென்றடையாமல் நாதலயத்துடன் இனிய ஒலியாக சேரவேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். மெட்டமைத்த பிறகு பாடல்கள் உருவாவதும், பாடல்கள் எழுதப்பட்ட பிறகு மெட்டுகள் உருவாதும் இயல்பு தான் என்றாலும், வெற்றிக்கரமான பாடல்கள் அமையவேண்டும் என்பது தான் இறுதி இலக்கு. மேலும் என்னுடைய அனைத்து விதமான புதிய முயற்சிகளுக்கு என்றென்றும் ஆதரவளிக்கும் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், இசைக் கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments