No ban on Veerappan web series. Bangalore court sensational verdict

வீரப்பன் வெப் தொடருக்கு தடை இல்லை

பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சந்தன வீரப்பன் கதையை வெப் தொடராக வெளியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்று பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

‘குப்பி’, ‘காவலர் குடியிருப்பு’, ‘ஒரு மெல்லிய கோடு’, ’வனயுத்தம்’ஆகிய படங்களை இயக்கியவர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதைகளை திரைப்படமாக்குவதில் வல்லவரான ரமேஷ், சந்தன வீரப்பன் கதையை ‘வனயுத்தம்’ என்ற பெயரில் திரைப்படமாக இயக்கினார். இதில் வீரப்பன் பற்றி விரிவான தகவல்களை சொல்லமுடியவில்லை என்று கருதியதால் வீரப்பன் கதையை வெப் தொடராக இயக்க முடிவு செய்தார்.

படப்பிடிப்புக்கான பணிகள் நடந்துகொண்டிருந்த நிலையில் வெப் தொடருக்கு தடை கேட்டு வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வழக்குத் தொடர்ந்தார். பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட்டில் இந்த வழக்கு நடந்துவந்தது. இந்நிலையில் வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பு கடந்த 15-11-2022 அன்று வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பின் சாரம்சமாக “வீரப்பன் கதையை பயன்படுத்துவதற்கு ஏற்கனவே ஏ.எம்.ஆர் ரமேஷ் தரப்பில் முத்துலட்சுமிக்கு 25 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வீரப்பன் கதையை படமாக்குவதால் வீரப்பன், வீரப்பன் மனைவி, வீரப்பன் மகள் ஆகியோருக்கு எந்த கெட்டப்பெயரும் ஏற்படபோவதில்லை. எனவே வீரப்பன் கதையை படமாக்குவதில் எந்த தடையும் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் கூறியதாவது:-

‘வனயுத்தம்’ படத்தில் வீரப்பன் கதையை முழுமையாக சொல்லமுடியவில்லை என்ற காரணத்தால் வெப் தொடராக இயக்க முடிவெடுத்தேன். தமிழ்நாட்டில் இதை எதிர்த்து முத்துலட்சுமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடையை நீக்கி தீர்ப்பளித்தது. இனி தமிழ்நாட்டில் வழக்கு தொடரமுடியாது என்பதால் கர்நாடகாவில் வழக்கு தொடர்ந்தார். இப்போது அதிலும் வெற்றி பெற்றுள்ளோம்.

வீரப்பன் தொடரில் வீரப்பனாக கிஷோர் நடிக்கிறார். க்ரிமினல் சைக்காலஜி படிக்கும் ஒரு மாணவி, வீரப்பன் பற்றிய ஆய்வில் இறங்கும்போது வீரப்பன் பற்றிய செய்திகளை அவரது கோணத்தில் சொல்வதுபோல கதை நகரும். அந்த மாணவியாக எனது மகள் விஜயதா நடிக்கிறார்.ஒரு எபிசோட் ஒரு மணி நேரம் என்ற கணக்கில் மொத்தம் 20 மணி நேரம் வெப் தொடர் இருக்கும். இதுவரை நூறு நாட்கள் படப்பிடிப்பு நடத்தி 6 எபிசோட் தயாராகவுள்ளது. மொத்த பட்டப்பிடிப்பும் முடிந்து மார்ச் மாதத்திற்கு பிறகு வெப் தொடரை வெளியிட திட்டமிட்டுள்ளோம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் தொடர் தயாராகிறது. வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது”.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments