Nitham Oru Vanam movie review | Ashok selvan | Ritu Varma | Aparna Balamurali

அழகிய பயணம் : நித்தம் ஒரு வானம் திரைப்பட விமர்சனம்!

ரா.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன், ரிது வர்மா, சிவாத்மிகா, ஷிவதா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் நித்தம் ஒரு வானம்.

நமக்கு ஏற்படும் சாதாரண இழப்பை கண்டு மனமுடைந்து எல்லாமே போய்விட்டது என்று நினைப்பவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆனால் இதைவிட பெரியதான இழப்பை சந்தித்தவர்களை கண்டால் நமக்கு நடந்தது எல்லாம் ஒன்றுமே இல்லை என்று தோன்றும். அதுதான் நித்தம் ஒரு வானம் படத்தின் ஒரு வரிக் கதை. அசோக் செல்வன் கூச்ச சுபாவமும் சிடுசிடு கோபமும் கொண்ட நபர். இவருக்கு நிச்சயம் செய்த பெண் திருமணத்திற்கு முந்தைய நாள் அவரது காதலனுடன் சென்று விடுகிறார். இதனால் மனக்காயம் அடையும் செல்வன் யாருடனும் பேசாமல் கோபத்துடனேயே இருக்கார். இதனால் மருத்துவரான அபிராமி தான் எழுதியதாக சிறுகதை புத்தகத்தை கொடுத்து படிக்க சொல்கிறார். எந்தவொரு கதையை படித்தாலும் அதில் வரும் கதாபாத்திரமாக தன்னையை நினைத்துக் கொள்ளும் அசோக் சொல்வன் இந்த கதையையும் அதுபோன்றே படிக்கிறார். அதில் வரும் இரண்டு கதைகளும் முற்றுப்பெறாமல் இருக்க விடை தேடி மருத்துவரிடம் சென்றால், இது கற்பனை கதையல்ல உண்மைச் சம்பவம் நீயே சென்று கண்டுபிடி என்று கூறுகிறார். கதையில் வந்த கதாபாத்திரங்களை கண்டுபிடித்தாரா? அவர்களுக்கு என்ன ஆனது? அசோக் செல்வனின் நிலை என்பதை நல்ல ஒரு ஃபீல் குட் படமாக தனது முதல் படத்திலேயே கொடுத்துள்ளார் ரா‌.கார்த்திக்.

அசோக் செல்வன் படத்திற்கு படம் மெருகேறி வருகிறார். நடிப்பிலும் முன்னேற்றம் தெரிகிறது. இப்படத்தில் அர்ஷுன், வீரா, பிரபா என மூன்று கதாபாத்திரத்தில் நடித்து தடம் பதித்துள்ளார். சிடுசிடு மூஞ்சியாக சிறப்பாக நடித்துள்ளார். கதையில் வரும் இரண்டு கதாபாத்திரங்களும் இவரது நடிப்புக்கு தீனி. அசால்ட்டாக கையாண்டுள்ளார். ரிது வர்மா படம்‌ முழுக்க அசோக் செல்வனுடன் பயணிக்கும் கதாபாத்திரம். தன் பங்கை நிறைவாக செய்துள்ளார். சிவாத்மிகா முதல் கதையில் காதலியாக வந்து போகிறார். அபர்ணா பாலமுரளியின் கதாபாத்திரத்தை பார்க்கும் போது டும் டும் டும் படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தை நினைவூட்டுகிறது. கிராமத்து பெண்ணாக துறுதுறு குறும்புடன் வலம் வரும் பெண்ணாக சிறப்பாக நடித்துள்ளார். ஷிவதா தன்னம்பிக்கை பெண்ணாக கதையின் எமோஷனல் பக்கத்தை நிறைவு செய்கிறார். இப்படத்தின்‌ பலமே கதாபாத்திர வடிவமைப்பும் அவர்களின் நடிப்பும் தான். காளி வெங்கட், அழகம்பெருமாள் போன்றவர்களும் தங்களது பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

விது அய்யன்னாவின் ஒளிபரப்பு இமாச்சலப் பிரதேசத்தின் பனிப்படர்ந்த இடங்களை அழகாக காட்டியுள்ளது. பார்ப்பதற்கே கண்களுக்கு இதமாக இருக்கிறது. கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் ஓகே. தரன் குமாரின் பின்னணி இசை சிறப்பு. அந்தோணியின் கத்தரி தேவையான இடங்களில் தனது வேலையை செய்துள்ளது.

நமது வாழ்வில் நமக்கு ஏற்படும் துன்பங்களை நினைத்து வருந்துவதை விட இதைவிட பெரிய துன்பங்களை பார்த்தவர்கள் எல்லாம் அதனை கடந்து சென்று தமக்கான பாதையை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெறுகின்றனர் என்பதை பார்த்து நாமும் மனநிம்மதி அடைய வேண்டும் என்பதை அழகாக சொல்லியுள்ளார் இயக்குனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments