‘Iraivi’ outlet celebrates its fifth anniversary celebration | Vijaysethupathi | Jayashree Rajesh
‘இறைவி’ விற்பனையகம் ஐந்தாம் ஆண்டு விழா
வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து சேவையாற்ற வேண்டும் – தொழிலதிபர் நல்லி குப்புசாமி
வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய நாள்தோறும் நல்ல விசயங்களைத் தேடித் தேடிக் கற்கிறோம்- ‘இறைவி’ விற்பனையக நிறுவனர் ஜெயஸ்ரீ ராஜேஷ்
சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்து வரும் விற்பனையகங்களில் சென்னை வேளச்சேரி பிரதான சாலை, செம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ‘இறைவி’ எனும் விற்பனையகமும் ஒன்று. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி திருமதி ஜெயஸ்ரீ ராஜேஷின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் ‘இறைவி’ விற்பனையகம் ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் இந்நிறுவன வளாகத்தில் பிரம்மாண்டமான விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் தொழிலதிபர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினரான தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியாருக்கு இறைவி நிறுவனத்தின் தூண்களில் ஒருவரான உமா சண்முக பிரியன் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
தொழிலதிபர் நல்லி குப்புசாமி பேசுகையில், ” இறைவி விற்பனையகத்திற்கு இப்போதுதான் முதன்முறையாக வருகைத் தந்திருக்கிறேன். 1950 களில் இந்த பகுதியில் ஒரே ஒரு சாலை மட்டுமே இருந்தது. அந்த சாலையில் எப்போதாவது ஒரு கார் கடக்கும். வேளச்சேரியிலிருந்து கிழக்கு தாம்பரம் சாலை வரும் வரை சற்று பயமாகத்தான் இருக்கும். ஆனால் தற்போது சாலை வசதிகளும் மேம்பட்டு இருக்கிறது. மக்களும் ஏராளமானவர்கள் இங்கு வசிக்கிறார்கள். சாலை விரிவாக்கம் நடைபெற்று, ஏராளமான விற்பனையகங்களும் இருக்கின்றன. நீண்ட நாள் கழித்து இன்று தான் மீண்டும் இந்த சாலை வழியாக பயணித்து, ‘இறைவி’க்கு வருகை தந்திருக்கிறேன். சாலை நன்றாக விஸ்தாரமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற இடத்தில் இவ்வளவு பிரம்மாண்டமாக இறைவி கடை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இதனை நான் எதிர்பார்க்கவில்லை. இது இங்குள்ள மக்களுக்கும், இந்த கடைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கும் உற்சாகம் அளிக்கும். இறைவியின் சிறப்பம்சம் என்னவென்றால், ஆடை வடிவமைப்பாளர்கள் இங்கேயே இருக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை துல்லியமாக உணர்ந்து உடனடியாக அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுகிறார்கள். புதிய புதிய டிசைன்களை நாங்கள் அறிமுகப்படுத்துவதை விட, நீங்கள் அறிமுகப்படுத்தும்போது அது கூடுதல் கவனத்தை பெறும். அதனால் இந்த நிறுவனம் மேலும் அமோகமாக வளர வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். உங்களிடம் திறமையும், துணிவும் இருப்பதால் நீங்கள் மென்மேலும் வளர வேண்டும். வளர்வீர்கள் என ஆசீர்வதிக்கிறேன்.
எங்களுடைய வீட்டிலும், என்னுடைய சகோதரர்களின் வீட்டிலும் உள்ள அனைவரும் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர்கள்.
நல்லி சில்க்ஸ் தொடங்கி 94 ஆண்டுகள் ஆகிவிட்டது. சிறிய அளவில் தொடங்கப்பட்ட நல்லி சில்க்ஸ் கடை வாடிக்கையாளர்களின் பேராதரவால் இன்று உலகம் முழுவதும் 40 கிளைகளுடன் சேவையாற்றி வருகிறது. எங்களைப் போன்றே நீங்களும் உலகம் முழுவதும் ஏராளமான கிளைகளுடன் செயல்பட வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்றார்.
இறைவி நிறுவனர் ஜெயஸ்ரீ ராஜேஷ் பேசுகையில், ” இன்று இறைவி விற்பனையகம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது. இதன் பின்னணியில் ஏராளமானவர்களின் கடுமையான உழைப்பும், பேராதரவும் இருக்கிறது. அவர்கள் அனைவரையும் இந்த தருணத்தில் நன்றியுடன் அன்பையும் பகிர்ந்து கொள்கிறேன்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் இருநூறு சதுர அடியில் விற்பனையகத்தை தொடங்கினோம். இன்று 18,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக விரிவுப்படுத்தி இருக்கிறோம். இதற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தது என்னுடைய சகோதரர் விஜய் சேதுபதி தான். எண்ணமும், கற்பனையும் இருந்தாலும், அதனை வணிக ரீதியாக சாத்தியப்படுத்தியதில் இவர்களுக்கு கணிசமான பங்கு இருக்கிறது. அதில் ப்ரியன் அண்ணா, டேனியல், லோகு, காயத்ரி என பலரின் கடின உழைப்பும் இருக்கிறது.
இதைத் தவிர்த்து ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னணியில் இருக்கும் ஆண் மகனைப் போல், என்னுடைய ஒவ்வொரு வெற்றியின் பின்னணியில் கணவர் ராஜேஷின் பரந்த மனப்பான்மையுடனான ஒத்துழைப்பு இருக்கிறது. என் தொழில் வாழ்க்கையையும், சொந்த வாழ்க்கையையும் சமச்சீராக எடுத்துச் செல்வதில், என்னுடைய அம்மாவின் பங்களிப்பை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
என்னுடைய வியாபார வழிகாட்டி, தொழில் ரீதியான மானசீக குருவாக கருதும் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் இங்கு விருந்தினராக வருகை தந்து வாழ்த்தியிருப்பதை என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன். நான் எப்போதும் வியந்து பார்க்கும் தொழிலதிபரான நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களின் முன்னிலையில் நான் பேசுவேன் என கனவு கூட கண்டது கிடையாது. 2007 ஆம் ஆண்டில் புதிய விற்பனையகம் ஒன்றின் திறப்பு விழாவின் போது அவரை சந்தித்திருக்கிறேன். அவருடைய கம்பீரமான தோற்றம் என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒருமுறை அதிகாலை 5 மணி அளவில் சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு செல்லும் விமானத்தில் பயணித்தோம். அப்போது சக பயணியாக அதிகாலையிலேயே விமான பயணத்தை மேற்கொண்ட அவரது சுறுசுறுப்பினையும், திட்டமிடலையும் கண்டு வியந்தேன். 2020 ஆம் ஆண்டில் ஆண்டிலேயே அவரை அழைக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக அந்தத் திட்டத்தை கைவிட்டோம்.
அவரை நேரில் சென்று அழைத்த போது மிக இயல்பாக தேதி, நேரம், இடம் எது என கேட்டார். அவரிடம் ஒவ்வொரு முறை உங்கள் விற்பனையகத்திற்கு வரும்போது பல நுட்பமான விசயங்களை கற்றுக் கொள்கிறோம் என்றேன். அவரும், ‘நாங்களும் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அதனை பூர்த்தி செய்து வருகிறோம்’ என்றார். 200 சதுர அடியிலிருந்து 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவு வரை அவருடைய கடின உழைப்பில் நல்லி சில்க்ஸ் விரிவடைந்து இருக்கிறது. 40 கிளைகளையும் தொடங்கி இருக்கிறார்கள். ஏராளமான புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். மிக இயல்பான மனிதர். அவர் எங்கள் இறைவி விற்பனையகத்திற்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி. ” என்றார்.