Equal educational opportunity should be available to all – Actor Suriya speech

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 44-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா

மாணவர்கள் கவனம் சிதறாமல், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் – சிவகுமார்

சமமான கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் – சூர்யா

மனிதனை முழுமையாக்குவது கல்வி மட்டுமே – கார்த்தி

திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 44-ம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ. 2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழைமாணவர்களுக்கான, ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ நிதி உதவியும், மூத்த ஓவிய கலைஞர் ஜெயராஜ் அவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சமும் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் சோமாண்டர்குடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் திரு.ஞானபிரகாசம் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளுக்காகவும், ‘குறள் வழி கல்வி’ என திருக்குறளின் மேன்மையை பள்ளி எங்கும், மாணவர்களின் மனதில் விதைக்கும் பணிகளை முன்னெடுத்து வரும் திருச்சி சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனர் நடிகர் கார்த்தி பேசியதாவது, ஒரு முழுமையான மனிதனை உருவாக்குவது தான் கல்வியோட நோக்கம்.. நோக்கமா இருக்க முடியும்.. ஆனால் இன்றைய சூழல் மதிப்பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தர மனநிலை குறையவே இல்லை.. மாணவர்களின் உடல்நலம் மனநலம் பற்றிய போதிய அக்கறை கல்வி சூழலில் இல்லை.
வெற்றிகரமா இருக்கணும்.. அதே நேரம் மகிழ்ச்சியாக இருக்கணும்.. நம்ம எல்லாருக்கும் உள்ளேயும் ஒரு திறமை நிச்சயமா இருக்கு அதை வெளிப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் வழிகாட்டுவது கல்வியின் நோக்கமாக அமையவேண்டும்.

மதிப்பெண்கள் வாங்குவது மட்டும் கல்வி அல்ல, அன்றாடம் வாழ்விற்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பினை எடுத்துக் கூறுவதும் புரிய வைப்பதும் கல்வி முறை தான். பொருளாதாரத்துடனும் சமூகவியலுடனும் நம் நாட்டில் உள்ள சாதி மத அமைப்பு முறைகளை பேதங்களை களையவேண்டிய அவசியத்தை ஏற்றத்தாழ்வுகளை உடைக்க வேண்டிய அவசியத்தை சொல்லித்தருவதும் கல்விதான், என கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து வரவேற்புரை ஆற்றினார் கார்த்தி. வரவேற்புரை முடிந்ததும் மாணவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டர்.

நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார், “1979-ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை தொடர்ந்து, ப்ளஸ் டூ தேர்வில் சிறந்த உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்குப் பிறகு அகரம் ஃபவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி செய்து வருகிறது. சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டபடுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன். என்னைப் போல ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போக வேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல், தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.’’என்று கூறினார்.

அகரம் ஃபவுண்டேஷன் நிறுவனர் நடிகர் சூர்யா பேசியதாவது,
”அகரம் பவுண்டேஷன் கல்வி பணிகளுக்கான விதை 43 ஆண்டுகளுக்கு முன்னர் விதைக்கப்பட்டது. ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை 43 ஆண்டுகளாக இளம் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருவதன் தொடர்ச்சியே அகரம். சரியான சமமான கல்வி வாய்ப்பிற்கான ஒத்த கருத்துடைய மனிதர்கள், கல்வி நிறுவனங்கள், கல்வி சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து அகரம் பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.
கல்வியின் மூலம் நிரந்தர, நீடித்த மாற்றங்கள் உருவாக முடியும், இளம் பருவத்தினரில் ஒரு சிலரது வாழ்க்கை கனவுகளை நனவாக்கும் முயற்சியாய் ஆரம்பிக்கப்பட்ட அகரம் விதைத் திட்டம் கடந்த 14 ஆண்டுகளில் 5200 மாணவ மாணவியர்க்கு கல்லூரி கல்வி வாய்ப்பை தமிழகம் முழுவதும் குறிப்பாக கடற்கரை பகுதிகள், மலை கிராம பகுதிகள், அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் என்று பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறது.

களங்களின் யதார்த்தமே அகரத்தின் பணிகளை தீர்மானிக்கிறது. கடந்த மூன்று கல்வி ஆண்டுகளாக, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பள்ளி மேலாண்மை குழு, நான் முதல்வன், அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களை பள்ளிகளோட வளர்ச்சிக்கு பொறுப்பேற்க செய்வது போன்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான மேம்பாட்டு திட்டங்களில் அகரம் பங்கெடுத்து வருகிறது.

கூடுதலாக பரிசார்த்த முயற்சியாக ‘அகரம் தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் ஒன்றிய மலை கிராமங்களில் ஓராசிரியர் பள்ளிகளாக நடத்தப்பட்டு வரும் நான்கு தொடக்கப் பள்ளிகள் தேவையின் (முன்னுரிமை) அடிப்படையில் தேர்ந்தெடுத்து, அகரம் முன்னாள் மாணவர்கள் தினசரி கற்பித்தல் பணிகளை தொடர்ந்து வருகிறார்கள். தற்போது 30 பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்தவும், இடை நிற்றலை குறைக்கவும், கிராம மக்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

மாணவரது கல்வி வளர்ச்சிக்கெனவும், வாழ்வின் அடுத்த பரிமாணத்தை நோக்கி அவர்களை அழைத்துச் செல்வதற்கும் அகரம் சவாலான பணிகளை முன்னெடுத்து வருகிறது. தன்னார்வலர்கள் பொறுப்பேற்று நடத்தும் அகரம் பணிகளுக்கு உந்து சக்தியாக பொருளாதாரத்தை வழங்கி உடன் நிற்கும் நன்கொடையாளர்கள், விதைத் திட்ட மாணவர்களின் கல்வி வாய்பிற்க்காக தொடர்ந்து ஆதரவு கரம் வழங்கி அரவணைத்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றிருக்கும் நன்றிகள். ஊர் கூடி தேர் இழுப்பது போன்று தான் அகரம் பணிகள். எளிய குடும்பங்களின் கல்வி மேம்பாட்டிற்காக, ஒன்றிணைந்திருப்பது முன்னெப்போதையும் விட இன்று அவசியமானதாக இருக்கிறது. அகரம் என்றாலே அதன் அர்பணிப்புமிக்க தன்னார்வலர்களே. அவர்கள் ஒவ்வொருவருக்கும் இத்தருணத்தில் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

Thanks & Regards
Sathish Kumar PRO

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments