பிரம்மாண்ட இயக்குனர் அமலாக்கத்துறையில் ஆஜர். மூன்று மணி நேரம் விசாரணை..! நடந்தது என்ன?
எந்திரன், சிவாஜி உட்பட பல திரைப்படங்களை இயக்கியவர் சங்கர். இவர் தனது வழக்கறிஞருடன் இன்று மாலை 5 மணியளவில் ஆயிரம் விளக்கில் அமைந்துள்ள சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு ஒன்றிற்காக சுமார் 3 மணி நேரமாக அமலாக்கத்துறை துணை இயக்குனர் மல்லிகா அர்ஜுனா, இயக்குனர் சங்கரிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இயக்குனர் சங்கரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் என்ன வழக்கு என்பதனை அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
விசாரணைக்கு இயக்குனர் சங்கர் ஆஜரானதை தெரிந்து கொண்ட ஊடகத்தினர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நின்றிருந்தனர். இதை அறிந்த இயக்குனர் சங்கர், ஊடக கண்களில் படாமல் இருக்க வாடகை காரில் பின் வழியாக சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் மீண்டும் வழக்கு தொடர்பாக இயக்குனர் சங்கரை அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.