Aadhar movie 2022 Review
இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஆதார்’ படத்தின் விமர்சனம்;
கட்டிடத்தொழிலாளியான கருணாஸின் மனைவி ரித்விகா பிரசவவலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் குழந்தைபேறுக்காக அனுமதிக்கப்படுகிறார். அங்கு அவருக்கு உதவி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார் நடிகை இனியா. இந்த நிலையில் திடீரென்று ரித்விகா காணாமல் போக, இன்னொரு பக்கம் மருத்துவமனையின் கழிவுநீர் தொட்டியில் பிணமாக மிதக்கிறார் இனியா.
இதனையறிந்து கொண்ட கருணாஸ் பச்சிளங்குழந்தையை தூக்கிக்கொண்டு மனைவியை கண்டுபிடித்து தருமாறு காவல்நிலையம் செல்கிறார். இறுதியில் காணாமல் போன ரித்விகா என்ன ஆனார். இனியாவின் இறப்புக்கு காரணம் என்ன..? கருணாஸின் வாழ்கை என்ன ஆனது என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்தான் ஆதார் படத்தின் கதை.
நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் கருணாஸூக்கு -கனமான கதாபாத்திரம். கைக்குழந்தையோடு மனைவியை தேடி பரிதவிப்பது, காவல்நிலையத்தில் மனைவியை மீட்டெடுக்க கெஞ்சுவது, அதிகாரவர்க்கத்தை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத இயலாமை என பல இடங்களில் கருணாஸ் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருப்பது சிறப்பு. அதே போல இன்ஸ்பெக்டராக வரும் பாகுபலி பிரபாகரின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது. இவர்களைத்தவிர அருண்பாண்டியன் இனியா, உமா ரியாஸ் என இன்னபிற கதாபாத்திரங்கள் எதுவும் பெரிதாக சோபிக்கவில்லை
ஒரு காட்சிக்கும் அடுத்தக்காட்சிக்கும் இடையே என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை இறுதிவரை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் ராம்நாத். முதல்பாதியில் கருணாஸ் மனைவியை தேடும் படலமும், இராண்டாம் பாதியில் அதிகாரவர்க்கமானது தன்னை தப்பிவித்துக்கொள்வதற்காக ரித்விகாவை வைத்து ஆடும் ஆட்டமும் திரைக்கதையாக நீள்கிறது.
படத்தின் பிளஸ்:
கருணாஸ், பாகுபலி பிரபாகரின் நடிப்பு, பின்னணி இசை, மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு
படத்தின் மைன்ஸ்:
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள்,
மொத்தத்தில் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரசியமும், வேகமும் இருந்திருந்தால் ‘ஆதார்’ இன்னும் அதிகமாக கவனம் பெற்றிருக்கும்.