A new tamil movie Kudimagaan review 2023 | Jenifer

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு வயிறு குலுங்க சிரிக்கலாம் “குடிமகான்” விமர்சனம்!

நாளைய இயக்குநர் சீசன் 6 ன் ரன்னர் அப் வந்த பிரகாஷ் என்பவர் இயக்கியுள்ள திரைப்படம் குடிமகான். முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நிச்சயம் படம் பார்த்து வெளியே வரும் நீங்கள் மனநிறைவோடு வருவீர்கள்.

படத்தின் நாயகன் ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பும் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஏடிஎம்களுக்கு சென்று பணம் நிரப்புவதே இவரது வேலை. அழகான மனைவி, இரண்டு குழந்தைகள் என அன்பான குடும்பம். அப்பா குடிகாரர் ஆனால் நாயகனுக்கோ எந்தவித கெட்டபழக்கமும் இல்லை. ஆனால் ஒருநாள் அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர் டீக்கடைக்கு சென்று டீ குடிக்கிறார் அதன்பிறகு திடீரென போதை தலைக்கேறி மருத்துவமனையில் தகராறு செய்கிறார். இதேபோன்று சில முறை நடக்க அது பிரச்சினையில் முடிகிறது. மருத்துவரை சென்று பார்த்தால் நாயகனுக்கு ஏதோ ஒரு புதுவித நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் கூறுகிறார். நீங்கள் குறிப்பிட்ட எந்த உணவு சாப்பிட்டாலும் உங்களுக்கு போதை ஆகிவிடும் என்கிறார். ஒருநாள் ஏடிஎம்மில் 100 ரூபாய் வைப்பதற்கு பதிலாக 500 ரூபாய் பணக்கட்டை வைத்து விடுகிறார். இதனால் பணம் எடுக்க வந்தவர்களுக்கு 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் வந்து விடுகிறது இதனால் நாயகனுக்கு வேலை பறிபோகிறது. வேலை வேண்டும் என்றால் 8லட்ச ரூபாய் வங்கிக்கு கொடுக்க வேண்டும் என்று மேனேஜர் சொல்கிறார். பணத்தை கட்டினாரா? பணத்தை எடுத்தவர்கள் திருப்பி கொடுத்தார்களா? இந்த போதை வியாதி என்ன ஆனது ? என்பதை காமெடி சரவெடியாக கொடுத்துள்ளனர் குடிமகான் படக்குழுவினர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சுந்தர் சி படங்களில் வருவது போன்ற காமெடி படம் பார்த்த அனுபவம் கிடைத்தது. படத்தில் நடித்த அனைவருமே பட்டையை கிளப்பி உள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரமும் நமக்கு அறிமுகமில்லாத முகமாக இருந்தாலும் நம்மையே அறியாமல் சிரிக்க வைத்துள்ளனர். நாயகனாக நடித்துள்ள விஜய் சிவன் அப்பாவியான தோற்றத்தில் அசத்தியுள்ளார். குடிப்பழக்கமே இல்லாத ஒருவனுக்கு போதையானால் எப்படி நடந்து கொள்வான் என்பதை உணர்ந்து இயல்பாக நடித்திருக்கிறார். மனைவியாக சாந்தினி நடுத்தர குடும்பத்து மனைவியாக பரிதாபம் வரவைக்கிறார். நாயகனின் அப்பாவாக சுரேஷ் சக்கரவர்த்தி தேர்ந்த நடிப்பை வழங்கியதோடு காமெடியிலும் கலக்கியுள்ளார். நமோ நாராயணன் மற்றும் அவருடன் வரும் கூட்டாளிகள் படம் நெடுக சிரிப்பை வரவழைக்கின்றனர். பிரகாஷ் எதிர்காலத்தில் நல்ல இயக்குனராக வர வாய்ப்புள்ளது. காமெடி படம் எடுக்கும் இயக்குனர்கள் தற்போது குறைந்துவிட்டனர். காமெடி வசனங்கள் நன்றாக ஒர்க்அவுட் ஆகியுள்ளன. கல்யாண மாப்பிள்ளையாக வரும் சேதுராமன் அட்டகாசம் செய்துள்ளார். தனுஷ் மேனன் இசையில் டாஸ்மாக்கில் வரும் பாட்டு நன்றாக உள்ளது. பின்னணி இசை நன்று‌. ஷிபு நீல் படத்தொகுப்பு போரடிக்காமல் படத்தை பார்க்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம். மொத்தத்தில் புதுமுகங்களை வைத்து காமெடியில் சரவெடி பட்டாசு வெடித்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments