Black Gold Press Meet – A True Events-Based Film Set to Release on November 13!

பிளாக் கோல்டு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு – உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவான திரைப்படம் நவம்பர் 13-ல் வெளியீடு!

வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிப்பில், தீரன் அருண்குமார் இயக்கத்தில் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பிளாக் கோல்டு’. இப்படத்தில் லிவிங்ஸ்டன், ப்ரியாலயா, துளசி, பிக்பாஸ் அபிராமி, ஏ. வெங்கடேஷ், அருள் டி. சங்கர், சபீதா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மனிதர்களின் தலைமுடியை மையமாகக் கொண்டு நடைபெறும் மிகப்பெரிய வணிகம், அதன் பின்னணியில் இயங்கும் மர்ம வலையமைப்பு மற்றும் அதனால் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் சந்திக்கும் பாதிப்புகள் என வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் எம். மூர்த்தி, இயக்குநர் தீரன் அருண்குமார், நடிகர்கள் வெற்றி, ஏ. வெங்கடேஷ், அபிராமி, அருள் டி. சங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்கம், கதைக்களம், நட்சத்திரங்களின் பங்களிப்பு மற்றும் படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எம். மூர்த்தி பேசும்போது, தான் முதலில் நடிகராக வேண்டும் என்ற ஆசையுடன் சினிமாவுக்கு வந்ததாகவும், இயக்குநர் தீரன் அருண்குமார் கூறிய வித்தியாசமான கதைக்களம் பிடித்ததால் இப்படத்தைத் தயாரிக்க முன்வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், இந்திய சினிமாவில் ‘பிளாக் கோல்டு’ ஒரு புதுமையான படமாக இருக்கும் என்றும், படத்தின் மேக்கிங் சிறப்பாக வந்துள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் பேசுகையில், நடிகர் வெற்றியுடன் இணையும் இரண்டாவது படம் இது என்றும், இப்படம் அவருக்குப் பெரிய திருப்புமுனையாக அமையும் என்றும் கூறினார். பிக்பாஸ் அபிராமி காவல்துறை அதிகாரியாக துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதையும் பாராட்டினார்.

இயக்குநரும் நடிகருமான ஏ. வெங்கடேஷ் பேசும்போது, தலைமுடி தொடர்பான வணிகத்தை மையமாகக் கொண்டு இதுவரை தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத ஒரு விஷயத்தை இயக்குநர் தீரன் அருண்குமார் புதுமையான முறையில் அணுகியிருப்பதாகக் குறிப்பிட்டார். படத்தின் நடிகர் தேர்வு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.

நடிகர் அருள் டி. சங்கர், இந்தப் படத்தில் நைனா ராஜா என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், அதற்காக சண்டைக் காட்சிகளில் நடிக்க சிறப்புப் பயிற்சி எடுத்ததாகவும் தெரிவித்தார். இயக்குநர் தீரனின் எழுத்து, கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் படத்தின் முன்திட்டமிடல் குறித்தும் பாராட்டிப் பேசினார்.

நடிகை அபிராமி பேசுகையில், காவல்துறை அதிகாரியாக நடிப்பது சவாலான அனுபவமாக இருந்ததாகவும், இயக்குநர் தீரன் கதையை மிகவும் தெளிவாக விளக்கியதால் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்ய முடிந்ததாகவும் தெரிவித்தார். இப்படத்திற்கு ஊடக நண்பர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இயக்குநர் தீரன் அருண்குமார் பேசும்போது, தனது முதல் படமான ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்திற்குப் பிறகு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும், வித்தியாசமான கதைகளுக்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ‘பிளாக் கோல்டு’ கதையை உருவாக்கியதாகவும் கூறினார்.

மேலும், நடிகர் வெற்றி கதைக்கு மிகவும் பொருத்தமானவராக இருந்ததால் அவரைத் தேர்வு செய்ததாகவும், தலைமுடி வணிகத்தின் பின்னணியில் குடும்ப உணர்வுகளையும் அப்பா – மகன் உறவையும் இணைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். தயாரிப்பாளர் மூர்த்தி அளித்த முழுமையான ஆதரவே பல தடைகளைக் கடந்து படத்தை முடிக்க உதவியதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

நடிகர் வெற்றி பேசும்போது, ‘பிளாக் கோல்டு’ தனது திரைப்பயணத்தில் முக்கியமான படம் என்றும், பொதுவாக பிளாக் கோல்டு என்றால் கச்சா எண்ணெய் அல்லது மிளகு என்று நினைப்பார்கள். ஆனால் இப்படத்தில் மனிதர்களின் தலைமுடியை மையமாகக் கொண்டு மிகப்பெரிய வணிகத்தின் பின்னணியைப் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார். வித்தியாசமான கதைக்களத்துடன் குடும்ப உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறி, ரசிகர்களும் ஊடகங்களும் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

சந்தோஷ் குமார் வீராசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார். உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பிளாக் கோல்டு’ திரைப்படம் நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.