வழக்கமான முகங்களைத் தவிர்த்து, காதல், குடும்ப பாசம், ஊர் மீதான அக்கறை எனப் பொறுப்பாக கதாபாத்திரத்தைக் கரைசேர்த்திருக்கிறார் யோகி பாபு. ஊர் மக்களிடமிருந்து இவரை அந்நியமாகத் தெரிய வைக்கும் வட்டார வழக்கைப் பேசுவது சற்றே நெருடல்!
லவ்லின் சந்திரசேகருக்கு நடிப்பில் பெரிய வேலைகள் கொடுக்கப்படவில்லை. தியாகியாக வரும் கவிஞர் விக்ரமாதித்யன் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்.
இவர்களைத் தாண்டி, ஊர் மக்களாக வரும் ஹலோ கந்தசாமி, ஊர்த்தலைவர் ஆகியோர் ஆங்காங்கே படத்திற்கு லேசாக ‘கலகல’ நிறம் பூசியிருக்கிறார்கள். அகழ்வாராய்ச்சித் துறை அதிகாரிகளாக வரும் ரேச்சல் ரெபாக்கா, ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு அழுத்தமில்லாத காட்சிகள் இல்லாததால் வெறுமனே திரைநேரத்தை மட்டும் ஆக்கிரமித்துப் போகிறார்கள்.
வறண்ட நிலங்கள் தரும் வெக்கையையும், கிராமத்து மண் வீடுகளின் எதார்த்தத்தையும் ஒளியமைப்பில் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வி. தியாகராஜன். படம் தொடங்கிய நொடியே துளியும் நிதானம் கொடுக்காமல் வேகமாக விரட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ராமர்.
அதனால், முதல் அரை மணி நேரத்திற்குப் பிறகு ஊர்ந்துப் போகும் காட்சிகளைச் சாணை பிடிக்காமலும் விட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கும் பாடல்கள் எவையும் செவிகளுக்குச் சுவை கூட்டவில்லை. கிணற்றுக்குள் விழுந்தது போல் தப்பிக்க முடியாமல் தவிக்கும் காட்சிகளுக்குக் கரம் கொடுக்காமல் போயிருக்கிறது பின்னணி இசை.
சில சுவாரஸ்யமான கதாபாத்திரங்களும், அதையொட்டிய காமெடி காட்சித்தொகுப்புகளும் ரசிக்க வைக்கின்றன. ஆனால், காமெடி என்பதை மட்டுமே வைத்து முதல் பாதியின் தொடக்கத்திலிருந்து இடைவேளை நேரம் வரை தோண்ட முயற்சித்திருக்கிறார்கள். சூழலுக்குப் பொருந்தாத காமெடி, வழக்கொழிப் போன கிராமத்து காமெடி, உருவக்கேலி ஆகியற்றை பின்பற்றி இந்தச் சினிமா நம்மையும் கிணற்றுக்குள் தள்ளிவிடுகிறது. அதனால், கதையை நகர்த்துவதில் கோட்டை விட்டிருக்கிறது திரைக்கதை.